லோடு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல் என்ஜினீயரிங் மாணவர் பலி
ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போந்தூர் அருகே லோடு வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக பலியானார்.
ஸ்ரீபெரும்புதூர்,
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூதேரிபண்டை கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகன் கிருஷ்ணகுமார் (வயது 19). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் ஒரகடத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, செங்கல்பட்டு-ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள போந்தூர் அருகே வரும் போது, அவருக்கு முன்னால் சென்ற லோடுவேன் திடீரென பிரேக் போட்டதால் கிருஷ்ணகுமாரின் மோட்டார்சைக்கிள் லோடுவேன் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கிருஷ்ணகுமார் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிருஷ்ணகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கிருஷ்ணகுமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். கிருஷ்ணகுமார் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகிறார்.