குளியல் அறையில் விஷ வாயு தாக்கி அண்ணன், தம்பி சாவு புனேயில் பரிதாபம்
புனேயில், குளியல் அறையில் விஷ வாயு தாக்கி அண்ணன், தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.
புனே,
புனே பீமாசங்கர் பகுதியை சேர்ந்தவர் பாண்டே. இவர் வீட்டருகே உள்ள கோவில் பகுதியில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை பாண்டேயின் மகன்களான அபிஷேக்(வயது16), ஆதித்யா(12) ஆகியோர் வீட்டில் உள்ள குளியல் அறையில் ஒன்றாக குளிக்க சென்றனர். வெகுநேரமாகியும் அவர்கள் குளியல் அறையில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த பாண்டே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சிறுவர்கள் 2 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.
சிறுவர்கள் பலி
இதைப்பார்த்து பதறிப்போன பாண்டே உடனடியாக மகன்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவர்கள் 2 பேரும் குளியல் அறை ஹீட்டர் சிலிண்டரில் இருந்து கசிந்த கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்தது தெரியவந்தது.