பெண் கைதி ஜெயிலில் தூக்குப்போட்டு தற்கொலை கணவரை கூலிப்படையை ஏவி கொன்றவர்
பெண் கைதி ஜெயிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் கைதானவர் ஆவார்.
தானே,
தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகா சிவசேனா துணை தலைவராக இருந்தவர் சைலேஷ். இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி சகாப்பூர், கணேஷ்புரி கிராம பகுதியில் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் சைலேசை அவரது மனைவி சாக்சி கூலிப்படையினரை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் சாக்சி மற்றும் கூலிப்படையினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயிலில் தற்கொலை
சாக்சி கல்யாண் ஆதார்வாடி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று முன்தினம் ஜெயில் கழிவறைக்கு சென்றார். வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து மற்ற கைதிகள் ஜெயில் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஜெயில் ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சாக்சி தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சாக்சியை பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
பெண் கைதி தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கணவரை கொலை செய்த குற்ற உணர்ச்சியில் இருந்த சாக்சி கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
பெண் கைதி தற்கொலை செய்த சம்பவம் கல்யாண் ஜெயிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.