சவுதி அரேபியாவில் விபத்து: 4 குமரி தொழிலாளர்கள் பலி

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் குமரி தொழிலாளர்கள் 4 பேர் பலியானார்கள்.

Update: 2019-01-28 23:00 GMT
குமாரபுரம்,

குமரி மாவட்டம் கொற்றிகோடு வாணங்கோடுவிளையை சேர்ந்தவர் முத்துகுட்டி. இவருடைய மனைவி சரோஜா. இவர்களுக்கு ராஜேந்திரன் (28), அஜித் (26) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

அஜித் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவிற்கு கட்டிட வேலைக்கு சென்றார். அவருடன் குமரியை சேர்ந்த மேலும் சில தொழிலாளர்களும் வேலை பார்த்தனர். இதில் மணலிக்கரை கிறிஸ்துபுரத்தை சேர்ந்த லாரன்ஸ் (45) என்பவரும் ஒருவர். இந்த நிலையில் அஜித், லாரன்ஸ் மற்றும் குமரியை சேர்ந்த வேறு சிலரும் ஒரு காரில் வேலைக்கு புறப்பட்டனர். இந்த கார் கோக்பார் பகுதியை சென்றடைந்த போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அஜித், லாரன்ஸ் உள்பட குமரியை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அஜித், லாரன்ஸ் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். பலியான லாரன்சுக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் பலியான குமரி தொழிலாளர்களின் உடல்களை சொந்த ஊர் கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்