பள்ளிகளை திறக்க வலியுறுத்தி பெற்றோர்களுடன் மாணவர்கள் போராட்டம் அரசு பஸ் சிறைபிடிப்பு-மறியல்
பள்ளிகளை திறக்க வலியுறுத்தி பெற்றோர்களுடன் சேர்ந்து மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பஸ் சிறைபிடிப்பு மற்றும் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடமதுரை,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக அரசு பணிகள் முடங்கியுள்ளன.
குறிப்பாக பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடமதுரை அருகே உள்ள பாடியூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 38 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வராததால் கடந்த ஒரு வாரமாக பள்ளி திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்து அலைந்து செல்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நேற்று காலை 10.15 மணியளவில் வடமதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு டவுன் பஸ்சை புதுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சிறைபிடித்தனர். அதன்பின் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் பள்ளியை உடனடியாக திறக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளியை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறினர். இதையடுத்து மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சிறைபிடித்த பஸ்சை விடுவித்தனர். இதனால் அந்த பஸ் தாமதமாக 11 மணிக்கு புறப்பட்டு சென்றது.
இதேபோல் சாணார்பட்டி ஒன்றியம் ராஜக்காபட்டி ஊராட்சி பண்ணைப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 150 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளிக்கூடம் பூட்டப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள் நேற்று மதியம் 12 மணியளவில் சிலுவத்தூர்-திண்டுக்கல் சாலையில் பண்ணைப்பட்டி பிரிவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதில் மாணவ, மாணவிகளுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து சாணார்பட்டி வட்டார கல்வி அலுவலர் சுதா மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவ, மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.