கோவையில் நிதிநிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்யப்பட்டது. பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2019-01-28 23:00 GMT
கோவை,

கோவை காந்திபுரம் 6-வது வீதியில் ‘கோகுலகண்ணன் சிட்பண்ட்ஸ்’ என்ற நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சக்திவேல். இதன் கிளை நிறுவனங்கள் ஈரோடு, திருப்பூர், அந்தியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ளது. வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி சக்திவேலும், அவருடைய மனைவி சுமதியும் பணம் வசூலித்துள்ளனர். மேலும் மாதாந்திர தவணை சீட்டும் நடத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட தவணை முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றி வந்தனர். நேற்று முதலீட்டாளர்கள் அந்த நிதி நிறுவனம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பணம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளிக்குமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, பணத்தை இழந்தவர்கள் புகார் மனு அளித்தனர். இந்த சம்பவம் குறித்து ஈரோட்டை சேர்ந்த பூபதி கூறியதாவது:-

கோகுலகண்ணன் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தேன். இதற்காக மாதந்தோறும் ரூ.12,500 வீதம் 40 மாதங்கள் செலுத்தினேன். தவணை முடிந்து பணம் கேட்டபோது காசோலை கொடுத்தனர். அதனை வங்கியில் செலுத்தியபோது பணம் இன்றி திரும்ப வந்தது. தொடர்ந்து பணம் தராமல் இழுத்தடித்து வந்தனர். இதனால் போலீசிலும் புகார் செய்தோம். என்னைப்போல் நூற்றுக்கணக்கானோர் ரூ.5 கோடிக்கு மேல் முதலீடு செய்து உள்ளனர். தற்போது சென்னையில் உள்ள சீட்டு நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இந்த நிதிநிறுவனத்தினர் திவால் ஆகிவிட்டதாக கூறியுள்ளனர்.

தீர்ப்பாய உத்தரவின்பேரில் சென்னையில் இருந்து 3 அதிகாரிகள் வந்து இதுகுறித்து விசாரணை நடத்த வந்தனர். நாங்களும் பணம் திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தோம். பணம் செலுத்தி பாதிக்கப்பட்டது குறித்து தனித்தனி புகார் மனுக்களை கொடுக்குமாறும், நிதிநிறுவன சொத்துக்களை பறிமுதல் செய்து உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிதி நிறுவன நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட ஏராளமானவர்கள் முற்றுகையிட்டதால் காந்திபுரம் 6-வது வீதி பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முற்றுகையிட்டவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பணம் முதலீடு செய்தவர்களிடம் புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்