பொங்கல் விடுமுறையையொட்டி மதுரை கோட்ட ரெயில்வேக்கு ஒரே வாரத்தில் ரூ.8¾ கோடி வருமானம்

பொங்கல் விடுமுறையையொட்டி மதுரை கோட்ட ரெயில்வேக்கு பயணிகள் போக்குவரத்து மூலம் ஒரே வாரத்தில் சுமார் ரூ.8 கோடியே 81 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

Update: 2019-01-28 22:45 GMT
மதுரை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் பொதுமக்கள் ரெயில்கள், பஸ்கள் மூலம் பயணம் செய்தனர்.

இதற்கிடையே, மதுரை ரெயில்வே கோட்டத்துக்கு, பொங்கல் பண்டிகை காலத்தில் பயணிகள் மூலம் கணிசமான அளவு வருமானம் கிடைத்துள்ளது. அதாவது, மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-சென்னை, தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ், நெல்லை- சென்னை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தென்மாவட்ட ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் மூலம் கோட்ட ரெயில்வேக்கு வருமானம் கிடைத்துள்ளது.

அதன்படி, கடந்த 11-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 10 லட்சத்து 34 ஆயிரம் பயணிகள் எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் முன்பதிவு செய்யப்படாத பொதுப்பெட்டிகளில் பயணம் செய்த பயணிகளின் மூலம் சுமார் ரூ.5 கோடியே 43 லட்சத்து 80 ஆயிரம் வருமானமாக கிடைத்துள்ளது.

அதேபோல, முன்பதிவு பெட்டிகளில் சுமார் 79 ஆயிரத்து 350 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன்மூலமாக சுமார் ரூ.3 கோடியே 37 லட்சத்து 61 ஆயிரம் வருமானமாக கிடைத்துள்ளது. ஆக 7 நாட்கள் பொங்கல் விடுமுறை காலத்தில் பயணிகள் போக்குவரத்து மூலம் மதுரை கோட்ட ரெயில்வேக்கு சுமார் ரூ.8 கோடியே 81 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் மதுரை கோட்ட ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் மூலம் ரூ.2 கோடியே 63 லட்சம் வருமானமாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

நெல்லை-தாம்பரம் இடையே முற்றிலும் பொதுப்பெட்டிகளை கொண்ட அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இயக்கப்படும் நேரம் பயணிகளுக்கு ஏற்றதாக இல்லை என்று தென்மாவட்ட பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த ரெயில் பயணிகள் இல்லாமல் எப்போதும் காலியாக செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் விடுமுறையை தொடர்ந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இந்த ரெயிலில் கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை 13 ஆயிரத்து 700 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.22 லட்சத்து 43 ஆயிரத்து 500 வருமானமாக கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்