அனந்தகுமார் ஹெக்டே, கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் மந்திரி எம்.பி.பட்டீல் தாக்கு
அனந்தகுமார் ஹெக்டே கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பதற்கு கூட தகுதி அற்றவர் என்று மந்திரி எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
மங்களூரு,
கர்நாடக போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல், தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார். புத்தூரில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர், மங்களூருவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.
அப்போது அவரிடம், மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே நேற்று முன்தினம் குடகில் நடந்த கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து மந்திரி எம்.பி.பட்டீல் கூறியதாவது:-
கிராம பஞ்சாயத்து உறுப்பினராக...
மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, இந்திய அரசியலமைப்பையும், நாடாளுமன்றத்தையும் மதிக்காமல் பேசியுள்ளார். இது ஒன்றும் புதிது அல்ல. அவர் தொடர்ந்து இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். அவரை பற்றி பேசுவதே தவறு என்று நான் நினைக்கிறேன். மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார்.
அவர் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர். அனந்தகுமார் ஹெக்டே கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர். அவர் முன்பு இந்திய அரசியலமைப்பை மாற்றுவது குறித்து பேசினார். இதுபோன்ற சர்ச்சை பேச்சுகளுக்கு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை
இதையடுத்து மந்திரி எம்.பி.பட்டீல் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு சட்டம்-ஒழுங்கு பற்றி மாநகர போலீஸ் கமிஷனருடன் ஆலோசனை நடத்தினார்.