பத்ராவதி நகரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது தமிழ்ச்சங்க பொன்விழாவில் ராகவேந்திரா எம்.பி. பேச்சு
பத்ராவதி நகரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என்று தமிழ்ச்சங்க பொன்விழாவில் ராகவேந்திரா எம்.பி. பேசினார்.;
சிவமொக்கா,
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தமிழ்ச்சங்கத்தின் 50-ம் ஆண்டு பொன்விழா நேற்று முன்தினம் இரவு பத்ராவதி பி.எச்.சாலையில் உள்ள தமிழ்ச்சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில், சிவமொக்கா தொகுதி எம்.பி. ராகவேந்திரா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாைவ தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
பத்ராவதியில் உள்ள இரும்பு உருக்கு தொழிற்சாலை வளர்ச்சி அடைய தமிழர்களே காரணம். தற்போது இந்த இரும்பு உருக்கு ஆலை செயல்படாமல் உள்ளது. இதனை மீண்டும் செயல்பட வைக்க மத்திய அரசிடம் பேசி வருகிறேன். தமிழர்கள் கர்நாடகத்தில் வாழ்ந்தாலும் தங்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை காப்பாற்றி வருகிறார்கள்.
தமிழர்களின் பங்கு முக்கியமானது
பத்ராவதி தமிழ்ச்சங்கம் 50-வது ஆண்டு பொன் விழாைவ கொண்டாடுகிறது. பத்ராவதி நகரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு உழைத்து, நகரை வளர்ச்சி அடைய செய்து வருகிறார்கள். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்பதற்கு முக்கிய காரணம் எடியூரப்பா தான். கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களின் நலனுக்காக எடியூரப்பா ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வந்தார்.
அடுத்த மாதம் (பிப்ரவரி) 3-ந்தேதி சிவமொக்கா-பெங்களூரு இடையே ஜனசதாப்தி ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் பத்ராவதியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.