வேலை நிறுத்த போராட்டம் நீடிப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியல்; 1,530 பேர் கைது

சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருகிறது. சேலத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 1,530 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-28 23:15 GMT
சேலம், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பணிகளிலும், பள்ளிகள் இயங்குவதிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடந்த 25-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 25 பேரை மட்டும் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

அதேசமயம், போராட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். இதனால் நேற்று போராட்டம் நடக்குமா? நடைபெறாதா? என்று ஒருவிதமான குழப்பம் நிலவியது.

இந்தநிலையில், சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலையில் 5-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். ஆரம்பத்தில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ஆனால் மதியம் 12 மணியளவில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் அதிகளவில் வரத்தொடங்கியதால் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு கூட்டம் அலைமோதியது.

இதைத்தொடர்ந்து மதியம் 12.30 மணியளவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கலெக்டர் அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக போலீஸ் வாகனங்கள் மட்டுமின்றி கூடுதலாக 5 அரசு பஸ்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 1,530 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 880 பேர் பெண்கள் ஆவர். பிறகு கைது செய்யப்பட்ட அனைவரும் அரசு பஸ்களில் ஏற்றப்பட்டு நேரு கலையரங்கம், டவுன் சுபிக்‌ஷா மகால், ஆர்.வி.திருமண மண்டபம் உள்பட 7 இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ அமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், தமிழக அரசின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. இதனால் போராட்டம் மேலும் தீவிரமடையும். எனவே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், என்றனர்.

அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் நீடித்து வருவதையொட்டி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு வழக்கத்திற்கு மாறாக கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்