நாட்டுப்படகில் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதி கேட்டு மீனவர்கள் மனு
கச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகில் செல்ல கோர்ட்டு உத்தரவின்படி அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கேணிக்கரை காவல்நிலையம் எதிரில் மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் பழம்திண்ணி வவ்வால்கள் அதிகஅளவில் வாழ்ந்து வருகின்றன.
கடந்த பல ஆண்டுகளாக இந்த வவ்வால்களை பாதுகாத்து அவற்றின் கழிவுகளால் இயற்கை உரம் அதிகஅளவில் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். இதற்கு அந்த பகுதியில் வவ்வால்களை பாதுகாக்கும் வகையில் சரணாலய பூங்கா அமைத்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டம் தேரிருவேலி அருகில் உள்ள ஆதங்கொத்தங்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:– எங்கள் கிராமத்தில் கடந்த பல வருடங்களாக குறைந்த மின் அழுத்தம் உள்ளது. 750 மீட்டர் தொலைவில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுவதால் குறைந்த மின்அழுத்தமாக உள்ளது.
இதனால் எங்களின் அன்றாட அத்தியாவசிய பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை. மின்மோட்டார் கூட பயன்படுத்த முடியவில்லை. எனவே, புதிய மின்மாற்றி அமைத்து மின் அழுத்த குறைபாட்டினை போக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள வளநாடு பகுதியை சேர்ந்த மாறன் என்பவரின் மகன் சுரேஷ்(வயது30) என்பவர் தோல் உறியும் வினோத நோயால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக உள்ளார். உடல் ஊனமுற்றோர் அடையாள அட்டை பெற்று மாதந்தோறும் உதவித்தொகை வாங்கி வருகிறார். இவர் சிறிய அளவில் நடத்தி வரும் பெட்டிக்கடையில் பொருட்கள் வாங்கி விற்பனை செய்ய ரூ.50 ஆயிரம் சிறுதொழில் கடன் வழங்குமாறு கோரி மனுகொடுத்தார்.
தங்கச்சிமடம் பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி தலைமையில் மீனவர்கள் அளித்த மனுவில், கச்சத்தீவு திருவிழாவிற்கு காலம்காலமாக நாட்டுப்படகில் குடும்பத்தினருடன் சென்று வந்த நிலையில் வணிக ரீதியாக விசைப்படகில் செல்ல தொடங்கியதால் நாட்டுப்படகில் செல்ல தடைவிதித்து விட்டனர்.
இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் நாட்டுப்படகில் குடும்பத்தினருடன் செல்வதற்கு அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.எனவே, இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவிற்கு 20 நாட்டுப்படகுகளில் 460 பேர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.