பம்புவெல்லில் 8 ஆண்டுகளாகியும் மேம்பால பணி முடிவடையாததால் மத்திய அரசை கண்டித்து மந்திரி தலைமையில் காங்கிரசார் ஊர்வலம்

மத்திய அரசை கண்டித்து மந்திரி யு.டி.காதர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2019-01-28 22:45 GMT
மங்களூரு,

மங்களூரு நகர் பம்புவெல் மற்றும் தொக்கொட்டூ பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி 8 ஆண்டுகள் ஆகியும், இன்னும் முடிவடையவில்லை. பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால், மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பல்ேவறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனாலும் மேம்பால பணி ஆமை வேகத்தில் தான் நடக்கிறது.

இந்த நிலையில் பம்புவெல் பகுதியில் 8 ஆண்டுகளாகியும் மேம்பாலம் அமைக்கும் பணி முடிவடையாததால் மத்திய அரசை கண்டித்து கர்நாடக நகர வளர்ச்சி துறை மந்திரி யு.டி.காதர் தலைமையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் சென்றனர். தலப்பாடி சுங்கச்சாவடியில் இருந்து பம்புவெல் வரை 17 கிலோ மீட்டர் தூரம் இந்த ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

சகஜம் தான்

இதையடுத்து மந்திரி யு.டி.காதர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பம்புவெல் பகுதியில் 8 ஆண்டுகளாகியும் மேம்பாலம் அமைக்கும் பணி முடிவடையவில்லை. பம்புவெல், தொக்கொட்டூ பகுதியில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக கூறியது பற்றி கேட்கிறீர்கள். கூட்டணி ஆட்சியில் கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம் தான். காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும். குமாரசாமி 5 ஆண்டுகளும் முதல்-மந்திரியாக இருப்பார். கருத்து வேறுபாடுகளை சரி செய்து குமாரசாமி தலைமையில் ஆட்சியை தொடர்கிறோம்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எங்களுக்கு சித்தராமையா தான் தலைவர். இதனை மனதில் வைத்து தான் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் சித்தராமையா முதல்-மந்திரியாக வேண்டும் என்று கூறுகிறார்கள். இதில் தவறில்லை. ஏனெனில் எங்களுக்கு சித்தராமையா தான் தலைவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்