வில்லியனூர் அருகே பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலி ஆம்புலன்ஸ் வராததால் சாலை மறியல்

வில்லியனூர் அருகே பஸ் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார். நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-28 22:30 GMT

வில்லியனூர்,

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது38).கட்டிட தொழிலாளி. நேற்று மதியம் வில்லியனூரில் வேலை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

சங்கராபரணி பாலத்தை தாண்டி ஆரியபாளையம் அருகே அவர் சென்ற போது எதிரில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தமிழக அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வேணுகோபால் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

அந்த வழியாக சென்றவர்கள் வில்லியனூர் போலீசாருக்கும், மருத்துவமனைகளுக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பாதையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து போக்கு வரத்து போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங், இன்ஸ்பெக்டர் ராஜசேகர வல்லாட், சப்–இன்ஸ்பெக்டர் புனிதராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மங்கலம், உருவையாறு வழியாக போக்குவரத்தை மாற்றி அனுப்பினர்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து புதுவையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தது. பின்னர் வேணுகோபாலின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்