புதுவையில் பரிதாப சம்பவம்: டி.வி. வெடித்து சிதறியதில் பெண் உள்பட 2 பேர் உடல் கருகினர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

புதுவை வைத்திக்குப்பத்தில் டி.வி. வெடித்து சிதறியதில் பாட்டியும், பேரனும் உடல் கருகினர்.

Update: 2019-01-28 22:30 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மனைவி முருகம்மாள்(வயது 55). மீன் வியாபாரி. குப்புராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே முருகம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். அவருக்கு பேரன் முறை கொண்ட கூனிமேட்டை சேர்ந்த பெர்னேஷ்(வயது 34) என்பவர் கடந்த சில மாதங்களாக முருகம்மாளின் வீட்டில் தங்கி இருந்து புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு முருகம்மாள் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டின் வராண்டாவில் படுத்து தூங்கினார். பெர்னேஷ் வீட்டின் அறையில் தூங்கினார். நேற்று காலை டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக வரண்டாவில் இருந்த டி.வி. சுவிட்சை முருகம்மாள் போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக டி.வி. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த அறை முழுவதும் தீ பரவியது. அங்கு இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. இதில் முருகம்மாளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. உடனே அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அறையில் படுத்திருந்த பெர்னேஷ் வெளியே ஓடிவந்தார். அவரும் தீயில் சிக்கினார்.

இதனால் வலி தாங்காமல் அவர்கள் கூச்சலிட்டனர். தப்பிக்க முயன்றபோதிலும் அவர்களால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று முருகம்மாள், பெர்னேஷ் ஆகிய 2 பேரையும் மீட்டனர். இதில் தீக்காயமடைந்த அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாதபடி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். சமையல் எரிவாயு கசிவு காரணமாக டி.வி. வெடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சோலைநகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமையல் எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்