பள்ளிபாளையம் அருகே தடுப்புச்சுவரில், அரசு பஸ் மோதியதில் பெண் சாவு
பள்ளிபாளையம் அருகே, தடுப்புச்சுவரில் பஸ் மோதியதில் பெண் இறந்தார்.
குமாரபாளையம்,
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள நைனாம்பட்டியை சேர்ந்தவர் சின்னுசாமி மனைவி சம்பூர்ணம் (வயது 40). இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் அனைவரும் ஒரு அரசு பஸ்சில் ஊருக்கு திரும்பினர்.
இந்த பஸ் நேற்று அதிகாலை 4 மணியளவில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சின்னார்பாளையம் வாய்க்கால் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் சம்பூர்ணம் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் எடப்பாடியை சேர்ந்த ஜெயலட்சுமி(58), சதீஸ்(4), அன்புகலா(34), சின்னதுரை(57), சேவிக்கவுண்டர்(55), பெருமாள்(52), வீரபாண்டியை சேர்ந்த கீர்த்தி(35), சென்னையை சேர்ந்த மேகலா(30) உள்பட 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியிலும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.