“ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிட வேண்டும்” ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிட வேண்டும் என்று கலெக்டரிடம், ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2019-01-28 23:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.அப்போது தூத்துக்குடி மாவட்ட தமிழ்புலிகள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், ‘தூத்துக்குடி தாலுகா தெற்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் 40 அருந்ததியர் குடும்பங்கள் உள்ளன. தற்போது இந்த பகுதியில் கழிவுநீரை தேக்கி வைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாகவும், குப்பை மேடு அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் செல்வசுந்தர் கொடுத்த மனுவில், ‘தூத்துக்குடி சிவன் கோவிலில் தேர் இழுத்து வரும் வீதியாக குறிப்பிட்ட சில வீதிகள் உள்ளன. அதில் ஜக்கம்மாள் கோவில் தெருவும் ஒன்று. தற்போது கோவிலில் உழவார பணிகள் நடந்து வருகிறது. கோவில் பணி நடைபெற்று வரும் பகுதியில் ஜக்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்த 3 பேர், பசுமை வீடு அனுமதி வாங்கி கோவிலின் ரத வீதியில் பசுமை வீட்டை கட்டி வருகிறார்கள். இதனால் அந்த வழியாக கோவில் தேர் இழுத்து செல்லும் போது சிரமம் ஏற்படும். கோவில் தேர் செல்ல இடையூறாக இருக்கும் கட்டிடங்களை நீக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் பலர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 13 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமாக அரசு அறிவிக்கப்படாத காலம் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தவும், இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.அதே போல் பாரம்பரிய கலாசாரத்தை பாதுகாக்க தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் பலர் நேற்று காலையில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அனைவரையும் உள்ளே அனுப்ப மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் 10-க்கும் மேற்பட்டவர்கள், கலெக்டர் அலுவலகம்முன்பு நெல்லை- தூத்துக்குடி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கடந்த 10 ஆண்டுகளாக இலவச பட்டா, வேலை வாய்ப்பு கேட்டு தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். எங்களுக்கு இதுவரை வேலை வாய்ப்பும், வீட்டுமனை பட்டாவும் வழங்கப்படவில்லை. எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேலைவாய்ப்பும், வீட்டுமனை பட்டாவும் வழங்க வேண்டும் என்று கூறினர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டுவிட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். திருநங்கைகளின் திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்