நாகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் 40 பேர் கைது

நாகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-28 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகே தாசில்தார் அலுவலகம் முன்பு நாகை-நாகூர் மெயின் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்ட னர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் சியாமளா, மாவட்ட துணைத்தலைவர் வடிவேல், செயற்குழு உறுப்பினர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 84 லட்சத்து 19 ஆயிரம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதில் 58 வயதாகியும் வேலை கிடைக்காமல் 5 ஆயிரத்து 860 பேர் உள்ளனர். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்ற அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத் தில் கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து 7 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டம் காரணமாக நாகை-நாகூர் மெயின் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்