ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பூட்டப்பட்டிருந்த அரசு பள்ளிகள் மாணவர்கள் வீட்டுக்கு திரும்பி சென்றனர்

நாகையில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு பள்ளிகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் மாணவர்கள் வீட்டுக்கு திரும்பி சென்றனர்.

Update: 2019-01-28 22:45 GMT
நாகப்பட்டினம்,

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்ற அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக ஜாக்டோ-ஜியோ அமைப்பை சார்ந்த அரசு அலுவலர்கள்-ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் நாகையை அடுத்த பால்பண்ணைச்சேரி நகராட்சி ஆரம்பப்பள்ளி பூட்டப்பட்டு இருந்தது. இதனால் 2 நாட்கள் விடுமுறை முடிந்து மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளியின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் மாணவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். பள்ளி ஆசிரியர் நேற்று (இன்று) பள்ளி விடுமுறை என கூறியதால் அனைவரும் மீண்டும் வீட்டிற்கு சென்றனர். இதேபோல் நாகையில் உள்ள ஒரு சில பள்ளிகளும் பூட்டப்பட்டு இருந்தது.

இதேபோல, நாகூர் சிவன் மேல வீதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியும் பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி முன்பு ஒன்று கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பள்ளி தலைமையாசிரியரிடம் விடுமுறை குறித்த விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததாலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மற்றவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்றார். 

மேலும் செய்திகள்