காவேரிப்பட்டணம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி

காவேரிப்பட்டணம் அருகே மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி 2 பேர் பலியானார்கள்.

Update: 2019-01-28 21:30 GMT
காவேரிப்பட்டணம்,


கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தேவர்முக்குளம் கிராமத்தை சேர்ந்த சேட்டு என்பவரது மகன் மணிகண்டன் (வயது 23). பொக்லைன் டிரைவர். சுருளிஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (28). கட்டிட மேஸ்திரி. இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவர்முக்குளத்தில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக விஜயகுமார் அங்கு வந்திருந்தார். பின்னர் விழா முடிந்தவுடன் மணிகண்டன், விஜயகுமார் இருவரும் மோட்டார்சைக்கிளில் சுருளிஅள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சுருளிஅள்ளி அருகில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன், விஜயகுமார் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்