நாகையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 4-வது நாளாக சாலை மறியல் 500 பெண்கள் உள்பட 800 பேர் கைது

நாகையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 4-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500 பெண்கள் உள்பட 800 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-28 23:00 GMT
நாகப்பட்டினம்,

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்ற அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும். 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் கடந்த 22-ந்தேதி முதல் அரசு அலுவலர்கள்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது.

இதை தொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று 4-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜூ, ஜெகநாதன், ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், புயல் குமார், பார்த்தசாரதி, மணிகண்டன், ரவிசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் தமிழாசிரியர் சங்கத்தை சேர்ந்த சிவகுருநாதன், பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சங்கர் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் நாகை-நாகூர் மெயின் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 500 பெண்கள் உள்பட 800 பேரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்