ஈரோடு அருகே ஆசிரியர்கள் பள்ளிக்கு வரக்கோரி மாணவர்கள் சாலைமறியல்

ஈரோடு அருகே ஆசிரியர்கள் பள்ளிக்கு வரக்கோரி மாணவ–மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-28 22:30 GMT

பவானி,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் கடந்த 22–ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் ஆசிரிய–ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். எனினும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவ–மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பல இடங்களில் மாணவ–மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு அருகே பெருமாள் மலை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி, ஆர்.என்.புதூர் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி, பவானி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் தங்களது பெற்றோர்களுடன் நேற்று காலை 9.20 மணி அளவில் ஈரோடு–பவானி ரோட்டில் ஒன்று கூடினார்கள்.

பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவ–மாணவிகள் கூறும்போது, ‘ஆசிரிய–ஆசிரியைகள் போராட்டம் காரணமாக யாரும் பள்ளிக்கு வரவில்லை. பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் படித்த இளைஞர்கள், பெண்கள் தாமாக முன்வந்து பாடம் நடத்தி வருகின்றனர்.

பிளஸ்–2 மாணவர்களுக்கு வருகிற 1–ந் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இதனால் எங்களால் படிக்க முடிவதில்லை. பாடம் நடத்த எங்களின் ஆசிரிய–ஆசிரியைகள் வரவேண்டும். ஆசிரிய–ஆசிரியைகள் இல்லாததால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அதற்கு போலீசார் கூறும்போது, ‘ஆசிரியர்கள் விரைவில் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவார்கள். எனவே பள்ளிக்கு செல்லுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட மாணவ–மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு பள்ளிக்கூடத்துக்கு சென்றனர். இந்த சாலை மறியலால் ஈரோடு–பவானி ரோட்டில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்