புஞ்சைபுளியம்பட்டியில் அரசு பஸ் மீது லாரி மோதல்; பெண் சாவு 2 பேர் படுகாயம்

புஞ்சைபுளியம்பட்டியில் அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-01-28 22:15 GMT

புஞ்சைபுளியம்பட்டி,

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு தமிழக அரசு பஸ் ஒன்று 50–க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. பஸ்சை பெருந்துறை சேர்ந்த நடராஜ் என்பவர் ஓட்டினார்.

இந்த பஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள சத்தியமங்கலம் ரோட்டில் தேசிபாளையம் பிரிவு அருகே உள்ள இரட்டைப்பாலம் என்ற இடத்தில் சென்று கொண்டு இருந்தது.அப்போது அந்த வழியாக பொள்ளாச்சியில் இருந்து மைசூர் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக அரசு பஸ்சின் பின்புற பக்கவாட்டில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதனால் பஸ்சுக்குள் இருந்து பயணிகள் சத்தம் போட்டு அலறினார்கள். மேலும் இந்த விபத்தினால் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியை சேர்ந்த லிங்கம்மாள் (வயது 65) மற்றும் நாகராஜ், ரங்கநாதன் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லிங்கம்மாள் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 2 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்