ஊத்தங்கரை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்

ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

Update: 2019-01-28 21:30 GMT
கல்லாவி, 

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் அத்திப்பாடி ஊராட்சி பள்ளத்தூர் கிராமத்தில் குடியரசு தின விழாவையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கிராம வளர்ச்சி மற்றும் அடிப்படை பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் உதவி பொறியாளர் மார்க்ஸ், ஊராட்சி செயலாளர் பார்த்திபன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சந்திரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு உதவி வேளாண்மை அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் செல்வமணி வரவேற்று பேசினார். இதில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கல்லாவி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு உதவி பொறியாளர் பூம்பாவை தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சாந்தி வரவேற்று பேசினார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல மாரம்பட்டி, மிட்டப்பள்ளி, எக்கூர், நாய்க்கனூர், கருமாண்டபதி, மேட்டுத்தாங்கல், கெங்கபிராம்பட்டி உள்ளிட்ட 34 ஊராட்சிகளிலும் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கிராம சபை கூட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தீவிர பங்கேற்புடன் கூடிய திட்டமிடல், ஆண்டு தணிக்கை அறிக்கை, புதுவாழ்வு திட்டம், கிராம சுகாதாரம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த கூட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்