அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
அரூர், பாப்பிரெட்டிப் பட்டி சட்டசபை தொகுதி தி.மு.க. வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோ சனைக் கூட்டம் இன்று (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தி.மு.க. தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கிருஷ்ணகிரியில் இருந்து காலை புறப்பட்டு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், கம்பைநல்லூர், மொரப்பூர் வழியாக அரூர் ஒன்றியம் செட்ரப்பட்டி கிராமத்திற்கு செல்கிறார். அங்கு காலை 9 மணிக்கு நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதை தொடர்ந்து காலை 10 மணிக்கு சின்னாங்குப்பத்தில் நடைபெறும் அரூர் சட்டசபை தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் அரூர் பயணியர் மாளிகையில் ஓய்வு எடுத்த பின்னர் மாலை 3 மணிக்கு தர்மபுரி ஒன்றியம் மூக்கனூரில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு ஒடசல்பட்டியில் நடைபெறும் பாப்பிரெட்டிப் பட்டி சட்டசபை தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு அவர் தர்மபுரி வழியாக சேலம் செல்கிறார்.
தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள் ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கட்சி தொண்டர்கள், பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். குறிப்பாக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.