சங்கரன்கோவிலில் கம்யூனிஸ்டு நிர்வாகியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சூப்பிரண்டிடம், அனைத்துக் கட்சியினர் மனு

சங்கரன்கோவிலில் கம்யூனிஸ்டு நிர்வாகியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீஸ் சூப்பிரண்டிடம் அனைத்துக் கட்சியினர் மனு கொடுத்தனர்.

Update: 2019-01-28 22:15 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தி.மு.க. நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப், கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் வீ.பழனி, கே.பழனி உள்ளிட்ட அனைத்துக்கட்சி நிர்வாகிகள் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் கடந்த 25-ந்தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் கைது செய்யப்பட்டவர்கள் சங்கரன்கோவில் மேலரதவீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர்களை விடுதலை செய்யாததால், கைதானவர்களின் உறவினர்களும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடிய பல அமைப்புகள் மற்றும் கட்சிகளை சேர்ந்தவர்களும் மண்டபத்தை சுற்றி கூடி நின்றனர்.

அப்போது சங்கரன்கோவில் போலீசார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக்ராஜை பார்த்து தகாத வார்த்தைகளை பேசி, தாக்கி இழுத்துச்சென்று கைது செய்துள்ளனர். மேலும் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரது கை, கால்களை கட்டி, கடுமையாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். மனித உரிமையை மீறிய சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அசோக்ராஜ் மீதுபோடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்