மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம்: தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது
மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரத்தில், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
மதுரை,
மதுரையில் ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டு விழா முடிந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி புறப்பட்டு சென்றார். மதுரை விமான நிலையத்தில் அவரை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழி அனுப்பி வைத்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக 17 கோரிக்கைகள் அடங்கிய 95 பக்க மனுவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.
மனுவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி அன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. எனவே அதனை நிறைவேற்றி தர வேண்டும்.
*சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும்.
* காவிரி மேகதாது திட்ட விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கப்பட்ட ஒப்புதலை மத்திய நீர்வள ஆணையம் திரும்ப பெற மத்திய நீர்வள அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும். இந்த திட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை நிராகரிக்க வேண்டும். தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் காவிரி படுகையில் எந்தவித கட்டுமான பணிகளும் நடைபெற கூடாது என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
* முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கு கேரள அரசுக்கு வழங்கிய ஒப்புதலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு தமிழக அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் கேரள அரசு ஒப்புதல் அளிக்கவும் வலியுறுத்த வேண்டும்.
* அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய நீர்வள அமைச்சகம், நதி நீர் மேம்பாடு அமைப்பு திரும்ப பெற வேண்டும்.
*‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் பிரதம மந்திரி வீடுகள் கட்டும் சிறப்பு திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கூடுதலாக கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
* காவிரி படுகைகளில் திறன் வாய்ந்த நீர் மேலாண்மைக்காக நீர் பாசன முறைகளை மேம்படுத்துவதற்கு ரூ.17 ஆயிரத்து 600 கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்து, திட்டங்களுக்கு நிதி வழங்க மத்திய நீர்வள ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
* புயல் மற்றும் பேரிடர் காலங்களில் விரைவாக மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை இணைந்து செயல்படுவதற்காக நிரந்தர நிலையம் மற்றும் கட்டுப்பாட்டு மையம் கன்னியாகுமரி அல்லது குளச்சலில் அமைக்க வேண்டும். ஒருங்கிணைந்த துறைமுகத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ரூ.400 கோடி சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.6 ஆயிரத்து 751 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.
* 14-வது நிதி ஆணையத்தின் மூலம் தமிழகம் பெற்ற நிதியை ஈடுகட்டும் வகையில் சிறப்பு திட்டங்களுக்காக ரூ.2 ஆயிரம் கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும்.
* 14-வது மத்திய நிதி ஆணையம் தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வர வேண்டிய செயல்திறன், அடிப்படை நிதி, ஜி.எஸ்.டி. பங்குத்தொகை, நிலுவையில் உள்ள இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்.
* சேலம் உருக்காலையில் ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் முனையம் அமைக்க பாதுகாப்பு அமைச்சகத்தை வலியுறுத்த வேண்டும்.
* மத்திய, மாநில அரசு பங்களிப்புடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை திட்டத்தின் கீழ் சமூக நீதி அமைச்சகம் வழங்க வேண்டிய(2017-18) ரூ.985.80 கோடியை வழங்க உத்தரவிட வேண்டும்.
* சிவகாசி பட்டாசு தொழிலையும், அதனை நம்பி இருக்கும் 8 லட்சம் குடும்பங்களையும் காப்பாற்ற சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தை தேவையான திருத்தங்கள் செய்ய உத்தரவிட வேண்டும்.
* மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் ‘உதான்’ திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் இருந்து விமான சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.
* மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிறுவ வேண்டும்.
* மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் இயங்கும் ஊட்டி உருளைக் கிழங்கு ஆராய்ச்சி நிலையம், மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம், கோவை சர்க்கரை ஆராய்ச்சி நிலையம், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆகியவை தமிழக மக்கள், விவசாயிகள் நலன் கருதி தொடர்ந்து இயங்க வேண்டும்.
*2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தையும் மத்திய-மாநில அரசின் சரிபாதி பங்களிப்புடன் நிறைவேற்ற முன் வர வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்றுள்ளன.