கிராமத்துக்கு தேவையான பணிகளை 100 நாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ள அறிவுறுத்தல்
100 நாள் வேலை திட்டம் மூலம் கிராமத்திற்கு தேவையான பணியை செய்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே மன்னார்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு கிராமத்திற்கான அடிப்படை, முக்கியமான தேவைகள் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இதுவரை தங்கள் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், கிராமத்திற்கு தேவையான என்னென்ன பணிகளுக்கு அரசு ஒதுக்கிய நிதியை செலவிடலாம் என்பதையும், அரசு ஒதுக்கீடு செய்த நிதியிலிருந்து அரசு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும் கிராம மக்கள் அனைவரும் தெரிந்து கொண்டு, அரசு திட்டங்கள் தங்கள் கிராமத்தில் தங்களின் பங்களிப்போடு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பது அந்தந்த கிராம மக்களுக்கு தான் தெரியும். ஆகையால், அரசாங்கத்திடம் உங்களுக்கான தேவைகளை தெரியப்படுத்தும் கடமையும் மக்களுக்கு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மூலமாக பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கிராம மக்கள் அனைவரும் ஏற்கனவே அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தையும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும், அந்த திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
100 நாள் வேலை திட்டத்தின் மூலம் தங்கள் கிராமத்திற்கு தேவையான பணிகளை செய்து முடித்து, அதன் பயனையும் தாங்களே அடைய முடியும். எனவே இத்திட்டத்தின் மூலம் நம் கிராமத்திற்கு என்ன தேவையோ அப்பணிகளை திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியினையும், வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினையும், தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதி மொழியினையும், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழியினையும் கலெக்டர் வாசிக்க கிராம மக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
வெம்பக்கோட்டை அருகேயுள்ள எரவார்பட்டியில் யூனியன் ஆணையாளர் முத்துமாணிக்கம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள், வேளாண்மை அதிகாரி மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சவ்வாஸ்புரம் ஊராட்சியில் ராமச்சந்திரன் தலைமையிலும், ஊராட்சி செயலாளர் ராஜபாண்டி முன்னிலையிலும் நடைபெற்றது. சென்னிலைக்குடி ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் அன்பழகன் தலைமையிலும் சுப்புலட்சுமி முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் சென்னிலைக்குடி மற்றும் கேத்த நாயக்கன்பட்டி பொது மக்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரணி, குலசேகரநல்லூர், திருச்சுழி, புலிக்குறிச்சி, பண்னை மூன்றடைப்பு, தமிழ்பாடி, முத்துராமலிங்கபுரம், சுத்தமடம், சலுக்குவார்பட்டி உள்பட 40 ஊராட்சிகளிலும் நடந்த கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊராட்சி பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும், 100 நாள் வேலை திட்ட பணிகள், 2019- 20-ம் ஆண்டு முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்ட பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் குறித்தும் விவாதிக்கப்பட்டன.