வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் அடி வாங்குவார்கள் நிதின் கட்கரி பேச்சு

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் அடி வாங்குவார்கள் என்று நிதின் கட்கரி கூறினார்.

Update: 2019-01-27 23:45 GMT
மும்பை,

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் அடி வாங்குவார்கள் என்று நிதின் கட்கரி கூறினார்.

அடி வாங்குவார்கள்

மும்பையில், மத்திய மந்திரி நிதின் கட்கரி நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில், நடிகை இ‌ஷா கோபிகர், பா.ஜனதாவில் இணைந்தார்.

கூட்டத்தில், நிதின் கட்கரி பேசியதாவது:-

மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் தலைவர்களை பொதுமக்களுக்கு பிடிக்கும். ஆனால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், அதே பொதுமக்களிடம், அரசியல் தலைவர்கள் (அரசியல்ரீதியாக) அடி வாங்குவார்கள்.

நான் வாக்குறுதி மட்டுமே கொடுக்கும் அரசியல்வாதி அல்ல. அதை 100 சதவீதம் நிறைவேற்றுபவன்.

மேம்பாலங்கள்

நான் மராட்டிய மாநில பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தபோது, நான் திட்டங்களை முடித்த விதத்தை மும்பை பத்திரிகையாளர்கள் பார்த்து இருப்பார்கள். மும்பையில் 50 மேம்பாலங்கள் கட்டப் போவதாக நான் அறிவித்தபோது, எல்லோரும் கேலியாக பார்த்தனர்.

ஆனால், மேம்பாலங்களை கட்டியதுடன், மும்பை-புனே இடையிலான பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக குறையவும் காரணமாக இருந்தேன்.

இவ்வாறு நிதின் கட்கரி பேசினார்.

சர்ச்சை

நிதின் கட்கரி, கடந்த மாதம், புனேயில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், ‘‘தேர்தல் தோல்விக்கு கட்சி தலைமை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார். 3 மாநில தேர்தல் தோல்வியைத்தான் அவர் சுட்டிக் காட்டுவதாக சர்ச்சை எழுந்தது.

கடந்த 13-ந் தேதி நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பேசுகையில், அரசியல்வாதிகள் பிற துறைகளில் தலையிடக்கூடாது என்று கூறினார். அதுவும் பரபரப்பை உண்டாக்கியது. அதைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், பொதுமக்களிடம் அடிவாங்குவார்கள் என்று பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்