மராட்டியத்தில் மேலும் 10 விமான நிலையங்கள் அமைக்கப்படும் குடியரசு தின விழாவில் கவர்னர் உரை
மராட்டியத்தில் மேலும் 10 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று குடியரசு தின விழாவில் கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசினார்.
மும்பை,
மராட்டியத்தில் மேலும் 10 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று குடியரசு தின விழாவில் கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசினார்.
கவர்னர் கொடி ஏற்றினார்
குடியரசு தினவிழா நாடு முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மராட்டிய மாநில அரசு சார்பில் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடந்தது.
இதில், கலந்துகொண்ட கவர்னர் வித்யாசாகர் ராவ் காலை 9 மணிக்கு தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அவர் முப்படையினர் மற்றும் இந்திய கடலோர காவல்படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, கோவா போலீசார், மாநில ரிசர்வ் போலீசார், ஆயுதப்படை போலீசார், கலவர தடுப்பு பிரிவு போலீசார், பெண் போலீஸ், ரெயில்வே போலீசார், போக்குவரத்து போலீசார், தீயணைப்பு படையினர், மும்பை மாநகராட்சி பாதுகாப்பு படை, வனத்துறை, என்.எஸ்.எஸ். மாணவர்கள், கடற்படை மாணவர்கள், சாலை பாதுகாப்பு படை, சாரணர் இயக்கம் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
உரை
பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவ் குடியரசு தின உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
நாட்டின் 30 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீடு மராட்டியத்திற்கு தான் வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் மராட்டியம் டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாறும். விவசாயிகள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக அரசு உறுதிபூண்டு உள்ளது.
நவிமும்பை சர்வதேச விமான நிலைய பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. மாநிலத்தில் இன்னும் 10 விமான நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளை அரசு தொடங்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அலங்கார ஊர்திகள்
இதைத்தொடர்ந்து மும்பை பெருநகர வளா்ச்சி குழுமம், குடிசை சீரமைப்பு ஆணையம், மகாடா, வேளாண் துறை, வனத்துறை, பழங்குடியின மேம்பாட்டு துறை, மாநில தேர்தல் ஆணையத்தின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன. அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு அலங்கார ஊர்திகளும் அணி வகுப்பில் கலந்துகொண்டன. இதேபோல கடற்படையின் ஏவுகணைகள் தாங்கிய அலங்கார ஊர்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதுதவிர மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன.
மொரீசியஸ் பிரதமர்
விழாவில் சிறப்பு விருந்தினராக மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் மனைவி கோபிதா ராம்தானேவுடன் கலந்துகொண்டார். மேலும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சட்டமன்ற சபாநாயகர் ஹரிபாவு பாக்டே, தொழில் துறை மந்திரி சுபாஷ் தேசாய், மேயர் விஷ்வநாத் மகாதேஷ்வர், முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி, எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் மாலையில் ராஜ்பவனில் கவர்னர் கொடுத்த தேநீர் விருந்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நரேஷ்பாட்டீல், மொரீசியஸ் நாட்டின் மந்திரிகள் யோகிதா ஸ்வாமிநாதன், லீலாதேவி, பிரிதிவிராஜ்சிங் ருபுன், தொழில் அதிபர்கள் அதி கோத்ரேஜ், ராஜாஸ்ரீ பிர்லா, மும்பை பல்கலைக்கழக துணைவேந்தர் சுகாஸ் பெட்னேக்கர், முப்படை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.