தற்காலிக ஆசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் திரண்ட பட்டதாரிகள்

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் கடந்த 22–ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

Update: 2019-01-27 22:15 GMT

நாகர்கோவில்,

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் கடந்த 22–ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு ஆணை பிறப்பித்தது. இதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்காக பட்டதாரிகள் குவிந்தனர்.

அதே போல குமரி மாவட்டத்திலும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பட்டதாரிகள் நேற்றும் குவிந்தனர். ஆனால் அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை அதிகாரிகள் வாங்கவில்லை. இன்று (திங்கட்கிழமை) ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் தான் அந்தந்த பள்ளிகளில் காலிப்பணியிடத்தை அறிந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து அங்கு குவிந்திருந்த பட்டதாரிகள், தற்காலிக ஆசிரியர் பணிக்காக தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றனர்.

மேலும் செய்திகள்