இந்தியாவிலேயே ஜவுளித்துறை திட்டங்களின் மூலம் அதிக பலன் பெற்றது தமிழகம்
ஜவுளித்துறை திட்டங்களின் மூலம் இந்தியாவிலேயே அதிக பலன் பெற்றது தமிழகம் தான் என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேசினார்.
கோவை,
தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறையுடன் ஜவுளி கூட்டமைப்புகள் இணைந்து பன்னாட்டு ஜவுளி கண்காட்சி கோவை கொடிசியா அரங்கில் நேற்று தொடங்கியது. பன்னாட்டு ஜவுளி கண்காட்சியை மத்திய ஜவுளித் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தொடங்கி வைத்து பேசியதாவது:-
இந்தியாவிலேயே ஜவுளிப்பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களான ஜவுளித்துறை நவீனமயமாக்கும் திட்டம், விசைத்தறி நவீன மயமாக்கும் திட்டம், விசைத்தறி நெசவாளர்களின் இன்சூரன்ஸ் திட்டம், விசைத்தறி நெசவாளர்கள், நூற்பாலைகளில் இருந்து நேரடியாக நூலை வாங்குகிற திட்டம், மத்திய பருத்தி கழகத்தில் இருந்து நடுத்தர மற்றும் சிறு, குறு நூற்பாலைகளுக்கு பஞ்சை நேரடியாக விற்பனை செய்யும் திட்டம், கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை செயல் படுத்தி அதன் மூலம் அதிக பலன் பெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
இந்தியாவில் விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட திட்டங்களில் 65 சதவீதம் தமிழகத்துக்கு வந்துள்ளது. விசைத்தறியாளர்கள் தங்களுக்கு தேவையான நூலை இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் பஞ்சாலைகளில் இருந்து நேரடியாக வாங்குவதற்காக ரூ.2 கோடி மானியத்துடன் கூடிய திட்டம் 45 சதவீதம் தமிழகத்துக்கு வந்துள்ளது. ஜவுளித்துறைகளுக்கான ஜி.எஸ்.டி. வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கப்பல்கள் உள்நாட்டு துறைமுகத்துக்கு வந்தால் உள்நாட்டு சரக்குகளை ஏற்றி வர முடியாது. இதனால் மராட்டியத்தில் இருந்து சென்னை வரும் வெளிநாட்டு கப்பல்கள் தமிழகத்துக்கு தேவையான பஞ்சை ஏற்றி வர முடியாத நிலை இருந்தது. இது தொடர்பாக சைமா விடுத்த கோரிக்கை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் இதுவரை இருந்து வந்த சட்டநடைமுறைகள் மாற்றப்பட்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து சென்னை வரும் வெளிநாட்டு கப்பல்களில் பஞ்சு ஏற்றி வர அனுமதி அளிக்கப்பட்டது.
இது தமிழகத்தில் உள்ள மில்களின் பஞ்சு பற்றாக்குறையை போக்க பெரிதும் உதவி உள்ளது. இங்கு நடத்தப்படும் வாங்குவோர் விற்போர் சந்திப்பில் அன்னிய நாட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் உள்நாட்டு விற்பனையாளர்கள் பங்கு கொண்டுள்ளனர். இதனால் இந்திய ஜவுளித்தொழில் மேலும் வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
இந்திய அளவில் ஜவுளித்தொழிலில், தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில், ஜவுளித்தொழில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. கைத்தறி நெசவாளர்களின் நலன்களை பாதுகாப்பதுடன், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை, நூற்பு மற்றும் துணி நூல் பிரிவுகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரையிலும், விசைத்தறி நெசவாளர்களுக்கு இரு மாதங்களுக்கு 750 யூனிட்டுகள் வரையிலும் விலையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு முதல் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜவுளித்துறையின் வளர்ச்சிக்காக, அரசால் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இங்கு நடைபெறும் கண்காட்சியின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் முனைவோருக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதோடு அன்னிய முதலீடும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகள் ஏற்படுவதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியதாவது:-
தமிழகத்தில் கைத்தறித்துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. வேளாண்மைக்கு அடுத்து 2-வது இடத்தில் கைத்தறி துறை உள்ளது. கைத்தறித்துறை உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் நாளுக்குநாள் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு இடையூறாக இருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக அரசு தீர்வு கண்டுள்ளதால் இத்தொழிலில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
பொதுவாக அனைத்து இடங்களிலும் வேலையில்லை என்ற விளம்பர பலகையை தான் அதிகமாக காணமுடியும். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் தான் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பர பலகை அதிக அளவில் காணமுடியும். திருப்பூர் வேலைவாய்ப்பை கொடுக்கும் இடமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கைத்தறி, துணி நூல் மற்றும் கதர்துறை அரசு முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குனர் முனியநாதன், மாவட்ட கலெக்டர் ஹரிகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், ஆர்.கனகராஜ், ஆயத்த ஆடை ஏற்றுமதி அபிவிருத்தி கழக துணைதலைவர் ஏ.சக்திவேல், இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு துணைதலைவர் ராஜ்குமார், தென்னிந்திய மில்கள் சங்க தலைவர் நடராஜ் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் கண்காட்சி மலர் வெளியிடப்பட்டது.
கண்காட்சியில் 9 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 400 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் நூற்பு, நெசவு, பின்னலாடை, ஆயத்த ஆடை, தொழில்நுட்ப ஜவுளி, பட்டு, காதி, கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட நூல் முதல் துணி ரகங்கள் வரை அனைத்து ஜவுளி பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியில் மத்திய அரசின் டெக்ஸ் புரோசில் மற்றும் விசைத்தறிகள் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி கவுன்சில் (பெடக்சில்) ஆகியவை இணைந்து நடத்திய வெளிநாட்டு வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பும் நடைபெற்றது. இந்த கண்காட்சி நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது.