நெல்லை மாவட்டத்தில் கூட்டுறவு இளநிலை ஆய்வாளர் தேர்வை 6,163 பேர் எழுதினர்

நெல்லை மாவட்டத்தில் கூட்டுறவு இளநிலை ஆய்வாளர் போட்டித்தேர்வை 6 ஆயிரத்து 163 பேர் எழுதினர்.

Update: 2019-01-27 22:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கூட்டுறவு இளநிலை ஆய்வாளர் போட்டித்தேர்வை 6 ஆயிரத்து 163 பேர் எழுதினர்.

இளநிலை ஆய்வாளர் போட்டி தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் கூட்டுறவு துறை இளநிலை ஆய்வாளர் பணிக்காக போட்டி தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி, லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெல்லை மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பேட்டை ராணி அண்ணா கல்லூரி, பாளையங்கோட்டையில் உள்ள கேத்தரின் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, பெல் மெட்ரிக்குலேசன் பள்ளி, சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மேக்தலின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ரோஸ்மேரி மேல்நிலைப்பள்ளி, ஜான்ஸ் கல்லூரி, நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 24 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.

இந்த தேர்வை கண்காணிக்க 29 ஆய்வுக்குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் மையங்களுக்கு நேரில் சென்று தேர்வை கண்காணித்தனர்.

6,163 பேர் தேர்வு எழுதினர்

தேர்வுக்கு மொத்தம் 9 ஆயிரத்து 265 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இதில் 6 ஆயிரத்து 163 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 3 ஆயிரத்து 102 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

தேர்வு மையங்களில் குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் ஏராளமானோர் தேர்வு எழுதினார்கள். அப்போது அவர்களின் குழந்தைகளை உடன் வந்திருந்த பெற்றோரும், கணவர்களும் கவனித்துக்கொண்டனர். இந்த தேர்வையொட்டி மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்