படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு கூடுதல் நிவாரண நிதி விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

படைப்புழுவினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிருக்கு கூடுதலாக நிவாரண நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-01-27 22:15 GMT
பெரம்பலூர்,

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் நீலகண்டன், பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். படைப்புழு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு தமிழக அரசு அறிவித்த ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் நிவாரண நிதி போதாது. கூடுதலாக நிவாரண நிதி வழங்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் கரும்பு, மக்காச்சோளம், வெங்காயம் ஆகிய பயிருக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

நிலுவை தொகையினை வழங்க வேண்டும்

2015-16, 2016-17-ம் ஆண்டுகளில் அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 95-வது பிறந்த நாளான அடுத்த மாதம் (பிப்ரவரி) 6-ந் தேதி கோவை வையம்பாளையத்தில் தமிழக அரசால் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அவரது நினைவு மண்டபத்தை தமிழக முதல்-அமைச்சர் திறக்க உள்ள விழாவில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்