குடும்பம் நடத்த வராததால் விபரீதம்: மனைவி வீட்டின் முன்பு விஷம் குடித்து கணவர் தற்கொலை

குடும்பம் நடத்த வராததால், மனைவி வீட்டின் முன்பு விஷம் குடித்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2019-01-27 22:15 GMT
கரூர்,

சேலம் மாவட்டம், கணவாய்புதூர் கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 27). கரூர் அருகே மண்மங்கலம் தாலுகா மேற்கூர் பகுதியை சேர்ந்த கீர்த்தனா (21). இவர்கள் இருவரும் நாமக்கல் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும்போது காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். வேல்முருகன் திருப்பூரில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

குழந்தை இல்லாததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கீர்த்தனா கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் வேல்முருகன் பலமுறை கீர்த்தனாவை தொடர்பு கொண்டு குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வராததால் வேல்முருகன் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சேலத்திலிருந்து புறப்பட்டு கரூர் வந்த வேல்முருகன் தனது மனைவியின் வீட்டுக்கு சென்றார். அங்கு கதவை தட்டியதும் கீர்த்தனாவின் பெற்றோர் வந்து திறந்தனர். அப்போது தான் விஷம் குடித்து விட்டதாகவும், வாழ விருப்பம் இல்லை எனவும் அவர்களிடம் தெரிவித்த வேல்முருகன் வீட்டின் முன்பு மயங்கி கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் மண்மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வேல்முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்