மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 1,810 பேர் விண்ணப்பம்
நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 1,810 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு வராததால் கற்பித்தல் பணி வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே தமிழக அரசின் உத்தரவின்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நேற்று முன்தினம் முதல் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
முதல்நாள் அன்று 1,020 பேர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்து இருந்தனர். 2-வது நாளாக நேற்று 790 பேர் விண்ணப்பம் செய்தனர். இதனால் தற்காலிக ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்த நபர்களின் எண்ணிக்கை 1,810 ஆக உயர்ந்து உள்ளது.
இவர்களில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 57 ஆசிரியர்களுக்கு பதிலாக உடனடியாக 57 பேர் நியமிக்கப்பட இருப்பதாகவும், நாளை (இன்று) வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு வருபவர்களின் எண்ணிக்கையை பொறுத்து இதர தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதன்மை கல்வி அதிகாரி உஷா கூறினார்.
இதற்கிடையே சாலைமறியலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களையும் பணியிடை நீக்கம் செய்ய அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்காக நகல் வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.