புயல் நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 40 பெண்கள் உள்பட 70 பேர் கைது

வேளாங்கண்ணி அருகே புயல் நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 40 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-27 23:00 GMT
வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணி அருகே மேலப்பிடாகை கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும்., மாநில குழு உறுப்பினருமான மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பெருமாள், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், விவசாய தொழிற் சங்க மாவட்ட தலைவர் சித்தார்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கஜா புயல் நிவாரணம் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை களைந்து அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். 2017-2018-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்கிட வேண்டும். அனைத்து வீடுகளுக்கும் நிவாரண பொருட்கள் பெட்டகத்தை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட கூரை வீடுகளில் உள்ள அனைவருக்கும் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டி தர வேண்டும். மா, தென்னை, முந்திரி, சவுக்கு மரங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை தாசில்தார் ஸ்ரீதேவி, கீழ்வேளூர் தாசில்தார் தையல்நாயகி மற்றும் கீழையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 70 பேரை கீழையூர் போலீசார் கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்