ரூ.150 கோடியில் கட்டப்பட்ட தஞ்சை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பிரதமர் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடியில் கட்டப்பட்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2019-01-27 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும் பணி கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. இந்த மருத்துவமனை கட்டும் பணி முடிவடைந்து உபகரணங்களும் வந்து விட்டன. தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவிற்கு இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் 8.3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 20 ஆயிரத்து 196 சதுர அடி பரப்பளவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையை மதுரையில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதில் இருதய மருத்துவ சிகிச்சை பிரிவு, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பியல் மருத்துவ சிகிச்சை பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக மருத்துவ சிகிச்சை பிரிவு, சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு, உடல் இரைப்பை மருத்துவ சிகிச்சை பிரிவு, உடல் இரைப்பை அறுவை சிகிச்சை பிரிவு, வாஸ்குலர் அறுவை சிகிச்சை பிரிவு, கதிரியக்க அறுவை சிகிச்சை பிரிவு, மயக்கவியல் சிகிச்சை பிரிவு, மருத்துவ ஆய்வகம், ரத்த வங்கி ஆகியவை செயல்பட உள்ளது.

இந்த கட்டிடம் மொத்தம் 5 மாடிகளுடன் 3 பிரிவுகளை கொண்டது. தரைதளத்தில் ரேடியாலஜிதுறை, ரத்த வங்கி, லேப், சமையல்கூடம், சலவைக்கூடம் ஆகியவை உள்ளன. முதல்தளத்தின் ஏ பிரிவு 56 படுக்கைகளும், பி பிரிவு 40 படுக்கைகளும் கொண்டது. 2-வது தளத்தின் ஏ பிரிவு 34 படுக்கைகளும், பி பிரிவு 40 படுக்கைகளும், 3-வது தளத்தின் பி பிரிவு 40 படுக்கைகளும் கொண்டது. இதே போல் 4 மற்றும் 5-வது தளத்தின் பி பிரிவு தலா 40 படுக்கைகள் என மொத்தம் 290 படுக்கைகள் கொண்டது. இதில் 5 அறுவை சிகிச்சை மையங்களும் அடங்கும்.

இந்த மருத்துவமனையில் தீயணைப்பு பாதுகாப்பு சாதனங்கள் ரூ.80 லட்சத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் ரூ.20 லட்சத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவும், ரூ.50 லட்சத்தில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதியும் இடம் பெற்றுள்ளது.

பிரதமர் மோடி மருத்துவமனையை திறந்து வைத்ததும், மருத்துவக்கல்லூரி சார்பில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. இனிப்புகளை பரசுராமன் எம்.பி., தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் ஆகியோர் வழங்கினர்.

இதில் மருத்துவக்கல்லூரி பகுதி அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் சரவணன், மொத்த கூட்டுறவு முன்னாள் பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி சண்முகம், மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பாரதி, முன்னாள் முதல்வர்கள் டாக்டர்கள் சிங்காரவேலு, அம்புஜம் இளங்கோவன் மற்றும் டாக்டர்கள், பேராசிரியர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்