புழலில் மினிவேனில் கடத்திய ரூ.6 லட்சம் குட்கா பறிமுதல் 2 பேர் கைது

புழலில் மினிவேனில் கடத்தி வரப்பட்ட அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.6 லட்சம் குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-27 22:15 GMT
செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல்-மதுரவாயல் சாலையில் கதிர்வேடு மேம்பாலம் அருகே புழல் இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினிவேனை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் அந்த மினிவேனியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் 40 மூட்டைகளில் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக மினிவேன் டிரைவரான திருவொற்றியூரைச் சேர்ந்த பாலாஜி (வயது 33) மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த இளவரசன் (34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பெங்களூருவில் இருந்து மினிவேனில் கடத்தி வந்ததும், அவற்றை மஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வினியோகம் செய்ய கொண்டு செல்வதும் தெரிந்தது.

இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா மூட்டைகளுடன் மினிவேனை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள், இதுபோல் வேறு எங்காவது குட்கா பொருட்களை பதுக்கி வைத்து உள்ளனரா? என விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்