தேனி, உத்தமபாளையம் கல்வி அலுவலகங்களில் விடுமுறை நாளிலும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்

தேனி, உத்தமபாளையம் கல்வி அலுவலகங்களில் விடுமுறை நாளிலும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

Update: 2019-01-27 23:00 GMT
உத்தமபாளையம், 

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதற்கட்டமாக பூட்டிக்கிடக்கும் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அறிவித்தது.

இதையடுத்து ஆசிரியர் பட்டய பயிற்சி முடித்தவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகள் கடந்த 26-ந்தேதி முதல் மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பம் செய்து வருகின்றனர். இதேபோல் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஏராளமானவர்கள் நேற்று வந்து விண்ணப்பித்தனர்.

விடுமுறை நாளான நேற்று உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஏராளமானவர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை கொடுத்தனர். இதில் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தன. இந்த விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உத்தமபாளையம் கல்வி மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை கம்பம், சின்னமனூர், தேவாரம், போடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். நேற்று 2-வது நாளில் 500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நாளை (இன்று) முதல் தற்காலிக ஆசிரியர் பணிக்கான ஆணை வழங்கப்பட உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்