பல்லடம், காங்கேயம், தாராபுரத்தில் 600 பெண்களுக்கு நாட்டு கோழிக்குஞ்சுகள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்
பல்லடம், காங்கேயம், தாராபுரத்தில் 600 பெண்களுக்கு நாட்டு கோழிக் குஞ்சுகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
பல்லடம்,
தமிழக அரசு கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு தலா 50 நாட்டு கோழிக்குஞ்சுகள் (4 வார கோழிகள்) வழங்கும் விழா, பல்லடத்தில் உள்ள மணிவேல் மஹாலில் நடந்தது. விழாவிற்கு கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்
விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 200 பேருக்கு தலா 50 நாட்டு கோழிக்குஞ்சுகளை வழங்கி பேசினார். இதில் பல்லடம் ஒன்றியப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அ.தி.மு.க நிர்வாகிகள் தண்ணீர்ப்பந்தல் நடராஜன், சரளை.பி.ரத்தினசாமி, சித்துராஜ், சொக்கப்பன், வாட்டர் பழனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உதவி இயக்குனர் வி.எம்.முருகேசன் நன்றி கூறினார்.
இதே போல் காங்கேயம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடந்த நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் தனியரசு முன்னிலை வகித்தார்.
இதில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, கோழி அபிவிருத்தி திட்டம், ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தில் காங்கேயம் வட்டாரத்தில் உள்ள 6 கிராமங்களை சேர்ந்த 200 பெண்களுக்கு விலையில்லா நாட்டு கோழிக்குஞ்சுகளை வழங்கி பேசினார்.இதில் ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 50 கோழிக்குஞ்சுகள் வீதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் வெங்கு என்கிற மணிமாறன் , கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, தாராபுரம் கோட்ட உதவி இயக்குனர்கள் டாக்டர் சக்திவேல்பாண்டி, டாக்டர் என். குமாரரத்தினம் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் தாராபுரம் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, தலா 50 நாட்டுக்கோழிக்குஞ்சுகள் வீதம் 200 பெண்களுக்கு நாட்டு கோழிக்குஞ்சுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமாரசின்னையன், சட்டமன்ற உறுப்பினர் தனியரசு. கூட்டுறவு சங்கத் தலைவர் டி.டி.காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.