கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி நண்பரின் பிறந்தநாளை கொண்டாடியபோது பரிதாபம்
கோபி அருகே நண்பரின் பிறந்தநாளை கொண்டாடியபோது வாய்க்காலில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.;
கடத்தூர்,
கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் பகவதிராஜா (வயது 21). இவர் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர்கள் அன்னூரை சேர்ந்த வீராசாமியின் மகன் முத்துக்குமரேசன் (21) மற்றும் ஜவகர் (21), ஹரிபிரசாத் (21), தோழிகள் சங்கிதா (21), பவித்ரா (21), அனிதா மற்றும் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியை சேர்ந்த மைதிலி (21) ஆவர்.
நேற்று ஜவகருக்கு பிறந்தநாள். இதனால் பிறந்தநாளை கொண்டாட ஜவகர் மற்றும் அவருடைய நண்பர்கள் கோபி அருகே காசிபாளையம் பகுதியில் உள்ள மைதிலி வீட்டுக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் காசிபாளையம் தடப்பள்ளி வாய்க்கால் கரையோர பகுதியில் ‘கேக்’ வெட்டி ஜவகரின் பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.
அப்போது பகவதிராஜா, முத்துக்குமரேசன் ஆகியோர் எதிர்பாராதவிதமாக வாய்க்காலுக்குள் தவறி விழுந்துவிட்டனர். இதனை கவனித்த ஹரிபிரசாத் வாய்க்காலுக்குள் குதித்து 2 பேரையும் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. மேலும் அவரையும் தண்ணீர் இழுத்துச்சென்றது. இதை பார்த்ததும் அந்த வழியாக வந்தவர்கள் வாய்க்காலுக்குள் குதித்து 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர்.
இதில் ஹரிபிரசாத் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற 2 பேரையும் காப்பாற்ற முடியவில்லை. உடனே இதுகுறித்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாய்க்காலில் மூழ்கிய 2 பேரையும் தேடினார்கள்.
வாய்க்காலில் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தொலைவில் பகவதிராஜா, முத்துக்குமரேசன் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். மேலும் இதுபற்றி அறிந்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிறந்தநாளை கொண்டாடியபோது வாலிபர்கள் 2 பேர் தடப்பள்ளி வாய்க்காலில் மூழ்கி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.