அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும் ஈரோட்டில் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும் என்று ஈரோட்டில் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

Update: 2019-01-27 22:30 GMT
ஈரோடு, 

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட முன்னாள் இஸ்ரோ இயக்குன ரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணைத்தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளை விட தற்போது சிறப்பான முன்னேற்றம் அடைந்து விட்டது. கையடக்க செல்போன் மூலமாக பல்வேறு தொழில்நுட்பங்களை எளிதாக கையாண்டு வருகிறோம். வருங்காலத்தில் அறிவியலின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டும். பாடப்புத்தகத்தை கடந்து மாணவர்கள் ஆராய்ச்சி செய்து அறிவியலை கற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விளையாட்டுத்துறையில் பயிற்சி தேவைப்படுவதைபோல அறிவியலுக்கும் செய்முறை அவசியம். கற்றல் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுபடும். மாணவர்கள் புதியதை கற்றுக்கொண்டு திறமையை வளர்க்க ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். கடந்த காலத்தில் அறிவியல் வளர்ச்சியின் உச்சம் என்பது ராக்கெட் விடுவதாக இருந்தது. இன்றைய காலத்தில் மாணவர்களே ராக்கெட்டை செலுத்த முடியும் என்ற நிலை எட்டப்பட்டு உள்ளது. எனவே அறிவியல் வளர்ச்சிக்கு அரசு மட்டுமே முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. தனியார் துறையும் சேர்ந்து ஈடுபடும்போது மக்களின் தேவையும் பூர்த்தியாகும். சிக்கனமாக தயாரிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டால் வெளிநாட்டினர் தேவையை நாம் பூர்த்தி செய்யும் நிலை உருவாகும். இதனால் வேலை வாய்ப்பு இல்லை என்கிற நிலையை கடந்து திறமை வாய்ந்தவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

அறிவியல் மன்றம் மூலமாக மாணவர்களின் திறனை கண்டறிந்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் ரீதியாகவோ, வர்த்தக ரீதியாகவோ மாணவர்களின் திறமை வெளிகொண்டு வரப்படும். அதற்கு உதவியாக ஏற்கனவே உள்ள அறிவியல் கூடங்களைவிட புதிய ஆய்வகங்கள் உருவாக்கப்படும். இதற்காக அரசு பள்ளிக்கூடங்களில் 3 ஆயிரம் அறிவியல் ஆய்வகம் உருவாக்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு திறமையை வளர்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்