தர்மபுரி அருகே கிராமத்திற்குள் புகுந்த 2 யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்

தர்மபுரி அருகே கிராமத்திற்குள் புகுந்த 2 யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2019-01-27 22:30 GMT

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி, மலையூர், சஞ்சீவராயமலை உள்ளிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகள் அனைத்தும் ஒகேனக்கல் வனப்பகுதியுடன் இணைந்துள்ளது. அவ்வப்போது யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பாப்பாரப்பட்டி பகுதிக்கு வந்து செல்கின்றன.

இந்த நிலையில் நேற்று அதிகாலை பிக்கிலி மலைப்பகுதியில் இருந்து குட்டியுடன் ஒரு யானை கடுக்காப்பட்டி வழியாக தர்மபுரி அருகே செல்லியம்பட்டி கிராமத்திற்குள் புகுந்தது. இந்த யானைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து மதிகோன்பாளையம் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த யானைகள் செல்லியம்பட்டியில் உள்ள கொல்லப்பட்டி ஏரிக்குள் சென்று விட்டது. ஏரி முழுவதும் முட்புதர்கள் நிறைந்துள்ளதால் யானைகள் இருக்கும் இடம் தெரியவில்லை.

அவ்வபோது யானைகள் பிளிரும் சத்தம் மட்டும் கேட்டதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இந்த யானைகளை பட்டாசுகள் வெடித்து பாப்பாரப்பட்டி காட்டுப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்