காரிமங்கலம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி தொழிலாளி சாவு 4 பேர் படுகாயம்

காரிமங்கலம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-01-27 22:30 GMT

காரிமங்கலம், 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள புக்கசாகரம் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ்(வயது 30). தொழிலாளி. இவருக்கும், குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முனிராஜ் வி‌ஷம் குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில் முனிராஜியின் உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். இந்த ஆம்புலன்ஸ் காரிமங்கலம் அருகே உள்ள மாட்லாம்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த முனிராஜ், இவரது உறவினர்கள் நாராயணம்மாள்(32), திம்மக்கா(40), ஆம்புலன்ஸ் உதவியாளர் ரஞ்சனி(25) மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் முனியப்பன்(38) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அனைவரும் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதில் முனிராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்