கர்நாடக அரசு சார்பில் சங்கொள்ளி ராயண்ணா ஜெயந்தி விழா கொண்டாட முடிவு முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி

கர்நாடக அரசு சார்பில் சங்கொள்ளி ராயண்ணா ஜெயந்தி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்- மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-26 22:45 GMT
பெங்களூரு, 

கர்நாடக அரசு சார்பில் சங்கொள்ளி ராயண்ணா ஜெயந்தி விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்- மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நினைவு தினம்

கர்நாடகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, நேற்று காலை பெங்களூரு அர்ஸ் சர்க்கிளில் உள்ள, அவரது சிலைக்கு முதல்-மந்திரி குமாரசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும் சங்கொள்ளி ராயண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சங்கொள்ளி ராயண்ணா ஜெயந்தி

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களில் சங்கொள்ளி ராயண்ணாவின் பங்கு பெரியது. நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னையே அர்ப்பணித்து கொண்டவர். அவர் இந்த நாட்டுக்காக ஆற்றிய பணிகளை நாம் மறந்து விட முடியாது. சங்கொள்ளி ராயண்ணா ஜெயந்தியை அரசு சார்பில் கொண்டாட வேண்டும் என்று கன்னட கூட்டமைப்புகள் என்னிடம் மனு கொடுத்துள்ளனர். கன்னட கூட்டமைப்புகள் மட்டும் அல்லாமல் கர்நாடக மக்களும் சங்கொள்ளி ராயண்ணா ஜெயந்தி விழா கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் சங்கொள்ளி ராயண்ணா ஜெயந்தி விழாவை அரசு சார்பில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். சங்கொள்ளி ராயண்ணாவை கவுரவப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்