காரைக்காலில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

காரைக்காலில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2019-01-26 22:23 GMT
காரைக்கால்,

காரைக்கால் கடற்கரை சாலையில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் கலெக்டர், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார் பன்வால் ஆகியோர் சமாதானத்தை குறிக்கும் வகையில் புறாக்களை பறக்கவிட்டனர்.

விழாவில் அசனா எம்.எல்.ஏ., மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதேபோல் மார்க் கப்பல் துறைமுகம் சார்பில் காரைக்கால் மேல வாஞ்சூரில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு துறைமுக துணை தலைவர் சீனிவாசராவ் தேசிய கொடி ஏற்றி வைத்தார். விழாவையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டு, கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

காரைக்கால் நிரவியில் உள்ள ஓ.என்.ஜி.சி. அலுவலகத்தில் செயல் இயக்குனர் வி.வி.மிஸ்ரா தேசிய கொடியேற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் வேளாண்மை அமைச்சர் கமலக்கண்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் ஆணையர் ராஜேந்திரன், கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிங்காரவேலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நெடுங்காடு மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ. தேசிய கொடி ஏற்றி வைத்தார். விழாவில் ஆணையர்கள் காளிதாசன், செல்வம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். திருமலைராயன்பட்டினம் மற்றும் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் கீதாஆனந்தன் எம்.எல்.ஏ. தேசிய கொடி ஏற்றி வைத்தார். ஆணையர் ஜான்அரோலியஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். காரைக்கால் நகராட்சியில் ஆணையர் சுபாஷ் தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்