குடியரசு தினத்தையொட்டி ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

குடியரசு தினத்தையொட்டி ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது.

Update: 2019-01-26 22:30 GMT
கரூர்,

குடியரசு தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கருப்பம்பாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் அன்பழகன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும் 2019-20-ம் நிதி ஆண்டு திட்ட அறிக்கை ஒப்புதல் பெறுதல், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள், கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடைசெய்தல் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.

முன்னதாக 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க பொதுமக்களும், அரசு அலுவலர்களும் அதனை திரும்பகூறி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பின்னர், ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பாக தாந்தோணி காளியம்மன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

லாலாபேட்டை அருகே உள்ள கள்ளபள்ளி ஊராட்சி மன்ற வளாகத்தில் குடியரசு தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சார் பதிவாளர் கருப்புதுரை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் குடிநீர் சிக்கனம், கழிவறை பராமரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுப்புற தூய்மை குறித்து விவாதிக்கப்பட்டது. இதேபோல பால் பிள்ளபாளையம் ஊராட்சி, கம்மநல்லூர் ஊராட்சி, மகாதானபுரம் ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.

நச்சலூர் அருகே உள்ள நெய்தலூர், சேப்ளாப்பட்டி, இனுங்கூர், பொய்யாமணி, சூரியனூர் ஆகிய ஊராட்சிகளில் நேற்று கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் குடிநீர் வசதி, தூய்மை பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காதப்பாறை ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி அலுவலர் சண்முகம் தலைமையிலும், மண்மங்கலம் ஊராட்சியில் ஊர் கொத்துக்காரர் சரவணன் தலைமையிலும், புன்செய் கடம்பங்குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி அலுவலர் கோபால் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இதேபோல் நொய்யல் அருகே உள்ள வேட்டமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் தன்ராஜ் தலைமையிலும், கோம்புபாளையம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் அனிதா தலைமையிலும், திருக்காடுதுறை ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் ரமேஷ் தலைமையிலும், புன்னம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் சிவக்குமார் தலைமையிலும், என்.புகளூர் ஊராட்சியில் ஊராட்சி செயலர் கோபால் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடந்தது. இதில் ஊர்பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்