அதிகாரிகள் வராததால் 4 ஊராட்சிகளில் பொதுமக்களே நடத்திய கிராம சபை கூட்டம்
அதிகாரிகள் வராததால் 4 ஊராட்சிகளில் பொதுமக்களே கிராம சபை கூட்டத்தை நடத்தினர்.
ஈரோடு,
குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் கிராம சபை கூட்டத்துக்கு அதிகாரிகள் வரவில்லை. இதனால் ஈரோடு மாவட்டத்தில் 4 ஊராட்சிகளில் பொதுமக்களே கிராம சபை கூட்டங்களை நடத்தினர்.
கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குத்தியாலத்தூர் ஊராட்சியில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியின் கிராம சபை கூட்டம் இருட்டிபாளையத்தில் நடந்தது. அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்களே கிராம சபை கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் கடம்பூரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு மனுவாக அனுப்பி வைக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதேபோல் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றி, கூத்தம்பாளையம் ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கும் அதிகாரிகள் வரவில்லை. இதைத்தொடர்ந்து குன்றியில் நடந்த கூட்டத்தில், ‘குன்றி கிராமத்துக்கு 3 முறை அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும், கூத்தம்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், ‘குரும்பூர் பிரிவு முதல் மாக்கம்பாளையம் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோபியை அடுத்த கலிங்கியம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்துக்கு பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் கிராம சபை கூட்டத்தை பொதுமக்களே நடத்த முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டம் தொடங்கியது. அப்போது கூட்டத்துக்கு வந்த 5 பேர், ஊராட்சி செயலாளர் இல்லாமல் கிராம சபை கூட்டத்தை நடத்தக்கூடாது. எனவே நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கிராம நிர்வாக அதிகாரி சரவணன் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.