கூடங்குளம் 3-வது அணு உலையில் 2023-ம் ஆண்டு முதல் மின்உற்பத்தி தொடங்கும் இந்திய அணுமின் கழக நிர்வாக இயக்குனர் தகவல்

கூடங்குளம் 3-வது அணுஉலையில் 2023-ம் ஆண்டு முதல் மின்உற்பத்தி தொடங்கும் என்று இந்திய அணுமின் கழக நிர்வாக இயக்குனர் கோடீஸ்வரன் கூறினார்.

Update: 2019-01-26 21:30 GMT
வள்ளியூர், 

கூடங்குளம் 3-வது அணுஉலையில் 2023-ம் ஆண்டு முதல் மின்உற்பத்தி தொடங்கும் என்று இந்திய அணுமின் கழக நிர்வாக இயக்குனர் கோடீஸ்வரன் கூறினார்.

குடியரசு தின விழா

கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் செட்டிகுளம் அணுவிஜய் நகரியத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்திய அணுமின் கழக நிர்வாக இயக்குனர் கோடீஸ்வரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார். பின்னர் கோடீஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாதனை

இந்தியாவிலேயே கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையின் மூலம், கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை 21 ஆயிரத்து 143 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2-வது அணு உலை மூலம் 8 ஆயிரத்து 965 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2-வது அணு உலைகள் மூலம் இதுவரை 30 ஆயிரத்து 108 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

முதல் அணு உலையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மார்ச் மாத இறுதிக்குள் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும். 3 மற்றும் 4-வது அணு உலைக்கான ரியாக்டர், டர்பன் கட்டிடங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவு பெற்று வருகிற 2023-ம் ஆண்டு 3-வது அணு உலையிலும், 2024-ம் ஆண்டு முதல் 4-வது அணு உலையிலும் மின் உற்பத்தி தொடங்கும். 5 மற்றும் 6-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சஞ்சய்குமார், நிலைய இயக்குனர் சுரேஷ்குமார் பிள்ளை, திட்ட இயக்குனர் ஜெயகிருஷ்ணன், தலைமை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, தலைமை கட்டுமான பொறியாளர் சுரேஷ், ரஷிய விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு தலைவர் இவானிசவ் இவான், மனித வள மேம்பாட்டு துணை பொதுமேலாளர் அன்புமணி, முதுநிலை மேலாளர் தேவபிரகாஷ், மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் மணீஸ்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்