திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு எதிர்ப்பு: நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கூடலூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரக்கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-01-26 23:00 GMT
கூடலூர்,

கூடலூர் நகராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க 8-வது வார்டு காந்திகிராமம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் அங்கு குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்க கிடக்கும் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நகராட்சி ஆணையரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். இதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் நேற்று அங்கு மீண்டும் பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள், இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரக்கிடங்கு அமைத்தால் பல்வேறு நோய் பரவும் அபாயம் ஏற்படும். மேலும் இப்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க பழங்கால ராஜா கிணறும் உள்ளது. எனவே இந்த திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறினர்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும், மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்வதாக தாசில்தார் உறுதி கூறினார். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்